கோவில் திருவிழாவில் மோதல், போலீஸ் நிலையம் முற்றுகை - 10 பேர் மீது வழக்கு
வத்தலக்குண்டு அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலையொட்டி ஒரு தரப்பினர் போலீஸ்நிலையத்தை முற்றுகையிட்டு தாங்கள் தாக்கப்பட்டதாக புகார் கூறினர். இதையடுத்து 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
வத்தலக்குண்டு,
வத்தலக்குண்டு அருகே உள்ள கட்டக்காமன்பட்டியில் சுமார் 2 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு கடந்த 3 நாட்களாக பிடாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு சாமி ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அப்போது இருதரப்பினர் கோஷ்டியாக மோதிக் கொண்டு கற்களை மாறி மாறி வீசினர். இதில் அரசு பஸ் ஒன்றின் பின்புற கண்ணாடி உடைந்தது
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 11.00 மணிக்கு அந்த ஊரை சேர்ந்த செல்வி மற்றும் அவரது தரப்பை சேர்ந்தவர்கள் வத்தலக்குண்டு வந்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் செல்வி போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் வீரன் மற்றும் அவரது தரப்பினர் தங்களை தாக்கியதாகவும், அதில் உறவினர்கள் கண்ணன், பிரியதர்சினி ஆகியோர் காயமடைந்ததாகவும், வீட்டை சூறையாடி ஒரு மோட்டார்சைக்கிளை சேதப்படுத்தியதாகவும் கூறி இருந்தார். அதன்பேரில் வீரன் மற்றும் 9 பேர் மீது வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் வழக்குப்பதிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது