வடக்கன்குளத்தில் துணிகரம் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் 110 பவுன் நகை கொள்ளை மற்றொரு வீட்டில் கொள்ளை முயற்சி
வடக்கன்குளத்தில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் 110 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. மற்றொரு வீட்டில் கொள்ளை முயற்சி நடந்தது.
வடக்கன்குளம்,
வடக்கன்குளத்தில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் 110 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. மற்றொரு வீட்டில் கொள்ளை முயற்சி நடந்தது.
ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் சங்குநகரை சேர்ந்தவர் பாலன் (வயது 64). இவர் ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி. இவருடைய மனைவி சண்முகதேவி (60). ஓய்வுபெற்ற அரசு ஆசிரியை. இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் பூவன், திருமணம் முடிந்து கேரளாவில் வசித்து வருகிறார். 2-வது மகன் விபின், திருமணம் முடிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாலனும், சண்முகதேவியும் பூவனை பார்ப்பதற்காக கேரளாவுக்கு சென்றுவிட்டனர். விபினும், அவருடைய மனைவி பரமேஸ்வரி மட்டும் வீட்டில் இருந்தனர். நேற்று முன்தினம் விபின் தனது மனைவி பரமேஸ்வரியுடன் அருகில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
110 பவுன் நகை கொள்ளை
பின்னர் நேற்று காலை விபின் தனது வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த துணிகள், பொருட்கள் வெளியே சிதறிக்கிடந்தன. அதிலிருந்த 110 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து விபின் பணகுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், பணகுடி இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து, கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் வரை ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
கொள்ளை முயற்சி
இதேபோல் சங்குநகரை அடுத்த ஈ.பி. காலனியை சேர்ந்தவர் இக்னேசியஸ். இவர் மும்பையில் வசித்து வருகிறார். இங்குள்ள அவருடைய வீட்டை வேலைக்காரர் ஒருவர் பராமரித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் வேலைகளை முடித்து விட்டு வீட்டை பூட்டிச் சென்றார். பின்னர் நேற்று காலை வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவர் பணகுடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் இரவு வீட்டிற்குள் புகுந்துள்ளனர். ஆனால் அங்கு நகை, பணம் எதுவும் இல்லாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.
போலீசார் வலைவீச்சு
மேலும் அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையர்கள் 2 பேரின் உருவம் அதில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. போலீசார் அந்த காட்சிகள் மூலம் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த 2 சம்பவங்களிலும் ஒரே நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.