செங்கோட்டை அருகே லாரி-கார் நேருக்கு நேர் மோதல்; நிதி நிறுவன மேலாளர்கள் 3 பேர் பலி
லாரி-கார் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் தனியார் நிதி நிறுவன மேலாளர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
செங்கோட்டை,
லாரி-கார் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் தனியார் நிதி நிறுவன மேலாளர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
நிதி நிறுவன மேலாளர்கள்
தேனி அருகே உள்ள ஆண்டிப்பட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன் (வயது 31). இவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றினார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பாலகுறிச்சியைச் சேர்ந்தவர் ரமேஷ் (38). இவர் பொன்னமராவதியில் உள்ள அதே நிதி நிறுவனத்தின் கிளையில் மேலாளராக இருந்தார். மதுரை வில்லாபுரம் கணபதிநகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (31). இவர் திருப்பத்தூரில் உள்ள அதே நிதி நிறுவனத்தின் மற்றொரு கிளையில் மேலாளர்.
இதேபோல் புதுக்கோட்டை அருகே உள்ள ஆலங்குடி தில்லைநகரில் குடியிருந்தவர் காஜாமைதீன் (40). இவர் ஆலங்குடியில் உள்ள அதே நிதி நிறுவன ஊழியர். புதுக்கோட்டை அருகே உள்ள பிரகதாம்பாள்புரத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (33). இவர் திருப்பத்தூரில் உள்ள அதே நிதி நிறுவனத்தின் கிளையில் ஊழியராக இருந்தார்.
பாலருவிக்கு குளிக்க சென்றனர்
இவர்கள் 5 பேரும் ஒரு காரில் நேற்று முன்தினம் குற்றாலம் வந்தனர். அருவிகளில் குளித்துவிட்டு இரவில் அங்கு தங்கினர். பின்னர் நேற்று காலையில் குற்றாலத்தில் இருந்து கேரள மாநிலம் ஆரியங்காவில் உள்ள பாலருவிக்கு குளிப்பதற்காக காரில் புறப்பட்டுச் சென்றனர். பாண்டீஸ்வரன் காரை ஓட்டினார். செங்கோட்டை அருகே உள்ள கட்டளைகுடியிருப்பு- கொல்லம் மெயின் ரோட்டில் சென்றபோது, கேரளாவில் இருந்து வந்த லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
3 பேர் பலி
இந்த விபத்தில் பாண்டீஸ்வரன், ரமேஷ், செந்தில்குமார் பரிதாபமாக இறந்தனர். காஜாமைதீன், விஜயகுமார் ஆகியோர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசாரும், தீயணைப்பு படை வீரர்களும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லாரியை ஓட்டிவந்த தர்மபுரி அருகே உள்ள கீழ்மாட்டுகண்ணூரை சேர்ந்த சரவணன் (31) காயம் அடைந்தார். அவரும் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து தொடர்பாக புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.