வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல்: மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் கலெக்டர் தலைமையில் நடந்தது

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடைபெறுவதையொட்டி மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது.

Update: 2019-07-13 23:00 GMT
வேலூர், 

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளும் முறைகள் குறித்து மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மண்டல தேர்தல் அலுவலர்கள் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளன்று ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக வினியோகிக்கப்பட வேண்டிய பொருட்கள் வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் பெற்றுக் கொள்ள வேண்டிய பொருட்கள் குறித்து நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

பயிற்சி மையத்தில் வாக்குச்சாவடிக்குரிய பணியாளர்களின் நியமன ஆணைகளை தாசில்தாரிடம் இருந்து காலை 7 மணிக்கு பெற்றுக் கொள்ள வேண்டும். காலை 7 மணிக்கு தாசில்தார் அலுவலகத்திலிருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்களை வாக்குச்சாவடி வாரியாக சரிபார்த்து பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு வாக்குப்பதிவு எந்திரங்களை பெறும்போது அவை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு உரியதுதானா? என்பதை திறந்து பார்த்து வரிசை எண்களை உறுதி செய்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

காலை 10 மணி முதல் 1 மணிக்குள் வாக்குச்சாவடிக்குரிய பணியாளர்களின் நியமன ஆணைகளை அன்று வகுப்பறையில் குழுக்கள் வாரியாக வினியோகித்து அதில் எவரேனும் வராமல் இருந்தால் தாசில்தார் உதவியுடன் மாற்று நபரை நியமிக்க வேண்டும்.

அனைத்து வாக்குச்சாவடி பணியாளர்களுக்கும் அடையாள அட்டைகளை வழங்க வேண்டும். வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் எந்த வாக்குச்சாவடியில் இருந்து பொருட்களை பெற தொடங்கி எந்த வழியில் வாக்கு எண்ணும் மையத்தை அடைய திட்டமிடப்பட்டுள்ளதோ அதை ஒருமுறை சரிபார்த்து கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று அதிகாலை 4.30 மணியளவில் அனைத்து வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவு அலுவலர்களை தயார்படுத்த வேண்டும். இதற்கென அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் நேரில் சென்று பார்வையிடுவது நல்லது.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உரிய நேரத்தில் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே தெரிவித்தவாறு அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி காலை 6.45-க்குள் மாதிரி வாக்குப்பதிவு முடிவு பெற்றதை செல்போன் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு நிறைவு பெறாத வாக்குச்சாவடிகளுக்கு நேரில் உடனடியாக செல்ல வேண்டும். காலை 7 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முறையான வாக்குப்பதிவு தொடங்கியதை உறுதி செய்ய வேண்டும்.

வாக்குப்பதிவு தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்தில் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் முறையாக செயல்படுகிறதா? என்பதை நேரில் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் சென்று தவறாமல் பார்வையிட வேண்டும். அதிக வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு தனி கவனம் செலுத்தி சீரான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். வாக்குச்சாவடியில் அனைத்து அடிப்படை வசதிகள் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளன்று அந்தந்த மண்டல அலுவலர்களால் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கலெக்டர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து செயல் விளக்கம் அளித்தார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், உதவி கலெக்டர் மெகராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ராஜ்குமார் (தேர்தல்), தாட்சாயினி (பொது) மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்