பவாய் ஐ.ஐ.டி. வளாகத்துக்குள் புகுந்த காளை மாடு மாணவரை முட்டி தள்ளியது
பவாய் ஐ.ஐ.டி. வளாகத்துக்குள் புகுந்த காளை மாடு மாணவரை முட்டி தள்ளியது. இதில் படுகாயம் அடைந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மும்பை,
பவாய் ஐ.ஐ.டி. வளாகத்துக்குள் புகுந்த காளை மாடு மாணவரை முட்டி தள்ளியது. இதில் படுகாயம் அடைந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவரை முட்டி தள்ளிய மாடு
மும்பை பவாய் ஐ.ஐ.டி. வளாகத்தில் நேற்று முன்தினம் அக்சய் (வயது21) என்ற மாணவர் நின்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு காளை மாடு இன்னொரு காளை மாட்டை விரட்டி கொண்டு வந்தது. இரண்டு காளை மாடுகளும் திடீரென ஐ.ஐ.டி. வளாகத்துக்குள் புகுந்தன.
அப்போது அந்த மாடுகள் மாணவர் அக்சயை நோக்கி வந்தன. அந்த நேரத்தில் அக்சய் தனது செல்போனை பார்த்து கொண்டிருந்ததால் அவர் மாடுகள் வருவதை கவனிக்கவில்லை.
இந்த நிலையில், முன்னால் வேகமாக ஓடி வந்த காளை மாடு பலமாக அவரை முட்டித் தள்ளி விட்டு ஓடியது. இதில் மாணவர் அக்சய் நிலைகுலைந்து விழுந்தார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
அவருக்கு வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவர்கள் ஓடி வந்து அவரை மீட்டனர். உடனடியாக அவரை சிகிச்சைக்காக அங்குள்ள ஐ.ஐ.டி. ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவரை காளை மாடு முட்டித் தள்ளிய இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. நேற்று இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.