நெல்லை அருகே மின்வாரிய டிரைவர் வீட்டை உடைத்து 5½ பவுன் நகை, பொருட்கள் கொள்ளை

நெல்லை அருகே மின்வாரிய டிரைவர் வீட்டை உடைத்து 5½ பவுன் நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-07-11 21:30 GMT
நெல்லை, 

நெல்லை அருகே மின்வாரிய டிரைவர் வீட்டை உடைத்து 5½ பவுன் நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மின்வாரிய டிரைவர்

நெல்லையை அடுத்த தாழையூத்தை சேர்ந்த வெள்ளத்துரை மகன் சாந்தகுமார் (வயது 30). இவர், பாளையங்கோட்டை மகராஜநகரில் உள்ள மின்வாரிய மேற்பார்வையாளர் அலுவலகத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இவருடைய மனைவி தீபா. அவருடைய பெற்றோர் வீடு பாளையங்கோட்டை சாந்திநகரில் உள்ளது. இந்த நிலையில் தீபா கடந்த 8-ந் தேதி சாந்தி நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். சாந்தகுமாரும் வேலைக்கு சென்று விட்டு மாமனார் வீட்டுக்கு சென்று விட்டார்.

5½ பவுன் நகை கொள்ளை

நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 5½ பவுன் நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டு இருந்தன.

தகவல் அறிந்த தாழையூத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து நோட்டமிட்ட மர்ம நபர்கள் சாந்தகுமார் வீட்டை உடைத்து கொள்ளையடித்தது தெரியவந்தது.

இது குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்