திம்பம் மலைப்பாதையில் ‘குரங்குகளுக்கு தின்பண்டங்கள் கொடுத்து விபரீதத்தில் சிக்கும் சுற்றுலா பயணிகள்’

திம்பம் மலைப்பாதையில் குரங்குகளுக்கு தின்பண்டங்கள் கொடுத்து சுற்றுலா பயணிகள் விபரீதத்தில் சிக்குகிறார்கள்.

Update: 2019-07-10 22:30 GMT
பவானிசாகர், 

சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதை இருபக்கமும் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, செந்நாய், மான், அனுமன்மந்தி வகை குரங்குகள் அதிகம் வசித்து வருகிறது. இதில் குரங்குகளை தவிர மற்ற வனவிலங்குகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று தங்களுக்கு தேவையான உணவுகளை தேடிக்கொள்ளும். ஆனால் குரங்குகளுக்கு இந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் அதிகமாக தின்பண்டங்கள் கொடுக்கிறார்கள். அதனால் அவைகள் வனப்பகுதிக்கு சென்று தங்களுக்கு தேவையான உணவுகளை தேடாமல் மலைப்பாதையின் இருபக்கத்தில் உள்ள தடுப்பு சுவர்களில் கூட்டம், கூட்டமாக அமர்ந்து கொண்டு யார் நமக்கு உணவு கொடுப்பார்கள்? என காத்திருக்கின்றன.

அவ்வாறு சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் தின்பண்டங்கள் மலைப்பாதையில் வீசுவதால் அதை எடுக்க குரங்குகள் போட்டி போட்டுக்கொண்டு நடுரோட்டிற்கு வரும். அதுபோன்ற நேரங்களில் வாகனங்களில் அடிபட்டு பலியாகும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன.

இதனால் வனத்துறை சார்பில், திம்பம் மலைப்பாதையில் குரங்குகளுக்கு தின்பண்டங்கள் கொடுக்க கூடாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த அறிவிப்பை யாரும் கண்டுகொள்வதே இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு திம்பம் மலைப்பாதையில் தடுப்பு சுவரில் அமர்ந்திருக்கும் அனுமன்மந்தி வகை குரங்குகள் மனிதர்களையோ, வாகனங்களை கண்டால் உடனே மர உச்சிக்கு தாவிக்குதித்து சென்றுவிடும். தற்போது பயமின்றி வாகனத்தில் வரும் சுற்றுலா பயணிகள் தின்பண்டங்கள் வீசும் சமயத்தில் வாகனத்திற்குள்ளேயே செல்ல முற்படுகிறது. சில நேரம் தாவிக்குதித்து டிரைவர் இருக்கைக்கே செல்கிறது. ஆனால் இதனால் ஏற்படும் விபரீதம் தெரியாமல் சுற்றுலா பயணிகள் குரங்குக்கு தின்பண்டங்கள் வீசுகின்றனர். ஆகவே வாகனத்தில் சென்றபடியே குரங்குகளுக்கு தின்பண்டங்கள் வீசுபவர்களை வனத்துறையினர் கண்காணித்து எச்சரிக்கவேண்டும் அல்லது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்