உயர்மின் கோபுர பாதை அமைக்க அளவீடு: அதிகாரிகளை தடுத்த 15 விவசாயிகள் கைது
சங்ககிரி அருகே விவசாய நிலத்தின் வழியாக உயர்மின் கோபுர பாதை அமைக்க அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை தடுத்த 15 விவசாயிகள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
சங்ககிரி,
சங்ககிரி அருகே வீராட்சிபாளையம் கிராமம் மங்கரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 51), விவசாயி. இவரது விவசாய நிலத்தின் வழியாக மத்திய அரசு நிறுவனமான பவர்கிரிட் சார்பில் உயர் மின்கோபுர பாதை அமைக்கும் பணியை மேற்கொள்வது தொடர்பாக நிலத்தை அளவீடு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதையடுத்து பவர்கிரிட் மேலாளர் பாஸ்கர் தலைமையில் சங்ககிரி தாசில்தார் அருள்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் நில அளவீடு செய்ய நேற்று முன்தினம் அந்த பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த பொன்னுசாமி குடும்பத்தினர் மற்றும் விவசாயிகள் அதிகாரிகளை நிலஅளவீடு செய்யவிடாமல் தடுத்து போராட்டம் நடத்தினர். இதனால் அதிகாரிகள் நில அளவீடு பணியை தொடராமல் அங்கிருந்து திரும்பி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று, சங்ககிரி அருகே தேவண்ணகவுண்டனூர் கிராமத்தில் கார்த்திகேயன் என்பவரின் விவசாய நிலத்தில் பவர்கிரிட் நிறுவனத்தினர் உயர்மின்கோபுர பாதை அமைப்பது தொடர்பாக அளவீடு செய்ய வந்தனர். அவர்களுடன் சங்ககிரி உதவி கலெக்டர் அமிர்தலிங்கம், சங்ககிரி போலீஸ் துணை சூப்பிரண்டு அசோக்குமார், சங்ககிரி தாசில்தார் அருள்குமார் மற்றும் போலீசாரும், வருவாய்த்துறையினரும் அங்கு வந்தனர்.
அப்போது கார்த்திகேயன், விஜயகுமார், ராஜம்மாள், மஞ்சுளா மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ராமமூர்த்தி, பெருமாள், ராஜேந்திரன் முருகேசன், பழனிசாமி, சேகர், ராமச்சந்திரன், ரங்கசாமி உள்பட 15 விவசாயிகள், நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாக கூறி, அவர்கள் 15 பேரையும் சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசாமி கைது செய்து தனியார் மண்டபத்தில் காவலில் வைத்தார். அதன்பிறகு நிலம் அளவீடு பணி தொடர்ந்து நடந்தது. இதையடுத்து அவர்கள் 15 பேரையும் போலீசார் மாலையில் விடுதலை செய்தனர்.