குமரி மாவட்டத்தில் மழை: பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1½ அடி உயர்வு

குமரி மாவட்டத்தில் பெய்துவரும் மழையின் காரணமாக ஒரே நாளில் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 1½ அடி உயர்ந்துள்ளது.

Update: 2019-07-10 22:45 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இந்த பருவமழை தொடங்கிய நேரத்தில், அதாவது கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் சில நாட்கள் சாரல் மழை பெய்தது. பின்னர் மழை ஓய்ந்து வெயில் அடித்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. ஒன்றிரண்டு நாட்கள் மிதமான மழை பெய்தது.

இந்தமழை நேற்று முன்தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்தது.

நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

41 அடியாக உயர்வு

பேச்சிப்பாறை-2.4, பெருஞ்சாணி-13, சிற்றார் 1-16, சிற்றார் 2- 12, புத்தன் அணை- 9.2, மாம்பழத்துறையாறு- 6, பூதப்பாண்டி- 1.2, களியல்- 2.4, கன்னிமார்- 1.2, குழித்துறை- 15, சுருளக்கோடு- 5, தக்கலை-4, குளச்சல்- 8.6, பாலமோர்- 19.4 கோழிப்போர்விளை- 11, அடையாமடை- 4, குருந்தங்கோடு- 7, முள்ளங்கினாவிளை- 8, ஆனைக்கிடங்கு- 5.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

இந்த மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கொஞ்சம், கொஞ்சமாக உயர்ந்து வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 39.40 அடியாக இருந்தது. ஒரே நாளில் அதாவது நேற்று இந்த அணையின் நீர்மட்டம் 1½ அடிக்கு மேல் உயர்ந்து 41 அடியாக உயர்ந்தது. இதேபோல் மற்ற அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து கொண்டிருக்கிறது.

நேற்று பகல் முழுவதும் நாகர்கோவில் நகரப்பகுதிகளில் வானம் இருண்டு காட்சி அளித்தது.

மேலும் செய்திகள்