கடையநல்லூர் அருகே காட்டு யானைகள் அட்டகாசம்
கடையநல்லூர் அருகே விவசாய நிலங்களில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.
அச்சன்புதூர்,
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கருப்பாநதி அணைப்பகுதியில் சொக்கம்பட்டிக்கு மேற்கே வரற்றாறு பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு விவசாயிகள் வாழை, தென்னை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிரிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் தங்கள் குட்டிகளுடன் புகுந்து அங்கு பயிரிட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட வாழைகள், 100-க்கும் மேற்பட்ட தென்னைகளை சேதப்படுத்தின. மேலும் வெள்ளரி தோட்டம் கிணற்றில் உள்ள தண்ணீர் குழாய்களையும், மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களையும் யானைகள் உடைத்து சேதப்படுத்தின. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கடையநல்லூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
ஏற்கனவே இந்த யானைகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வடகரை, மேக்கரை, காசிதர்மம், சின்னக்காடு பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வந்தன. பின்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்து கடந்த 2 நாட்களாக இங்குள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை நாசம் செய்து அட்டகாசம் செய்தன.
தொடர்ந்து நேற்று வரற்றாறு பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை நாசப்படுத்தி உள்ளன. யானைகளின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.