பழவூர் அருகே கேரள இறைச்சி கழிவுகள் கொட்டிய லாரி பறிமுதல்

கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை கொண்டுவந்து பழவூர் அருகே கொட்டிய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-07-10 22:15 GMT
வடக்கன்குளம், 

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அடுத்த பழவூர் அருகே உள்ள தெற்கு கருங்குளம் காட்டு பகுதியில் நேற்று ஒரு லாரி இறைச்சி கழிவுகளை கொட்டிக்கொண்டிருந்தது. இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த லாரியை சிறைபிடித்தனர். பின்னர் இதுகுறித்து பழவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் அய்யப்பன் என்பதும், கேரளாவில் இருந்து லாரியில் இறைச்சி கழிவுகளை ஏற்றிக்கொண்டு வந்து இந்த பகுதியில் கொட்டியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நெல்லை சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சுகாதார துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். தொடர்ந்து லாரி உரிமையாளர் கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரத்தை சேர்ந்த சார்லிக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்