கஞ்சா விற்றதாக 2 வாலிபர்கள் கைது

புதுவையில் கஞ்சா விற்றதாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-07-10 22:15 GMT
புதுச்சேரி,

புதுவை மரப்பாலம் சந்திப்பில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக முதலியார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் மரப்பாலம் பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் போலீசாருக்கு அவர்கள் மீதான சந்தேகம் வலுத்தது.

இதைத்தொடர்ந்து அவர்களது உடைமைகளை சோதனை செய்ததில் தலா 15 கஞ்சா பொட்டலங்களை அவர்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறி முதல் செய்தனர்.

இதையடுத்து 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று தொடர்ந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த கனகராஜ் (வயது 21), புதுவை மூலக்குளம் ஜெ.ஜெ.நகரை சேர்ந்த ஷியாம்ஜோஸ் (19) என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுவையில் கஞ்சா பொட்டலங்கள் தாராளமாக புழக்கத்தில் இருந்து வருகின்றன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து இந்த கும்பல் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வருவதாக தெரியவந்துள்ளது. திருவண்ணாமலை பகுதியில் இருந்து ஒரு பொட்டலம் ரூ.100-க்கு வாங்கி வந்து புதுவையில் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு பெண்தான் கஞ்சாவை மொத்தமாக விற்பனை செய்து வருவதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. புதுவையில் கஞ்சா வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களுக்கும் அந்த பெண் தான் சப்ளை செய்துள்ளார். ஆனால் அந்த பெண்ணை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்