மேட்டூரில் தொழிலாளியை கொல்ல முயன்ற வழக்கில் பிரபல ரவுடி உள்பட 3 பேர் கைது
மேட்டூரில் தொழிலாளியை கொல்ல முயன்ற வழக்கில் பிரபல ரவுடி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
மேட்டூர்,
இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியை சேர்ந்தவர் அம்மாசி. இவருடைய மகன் மாரி கவுண்டன் என்ற வெள்ளையன் (வயது 30). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் காலையில் இவர் ஒரு மோட்டார் சைக்கிளில் தொட்டில்பட்டியை அடுத்து அனல்மின்நிலைய சாலையை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து காரில் வந்த கும்பல், அவரது மோட்டார் சைக்கிள் மீது காரை மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வெள்ளையனை அந்த கும்பல் கொலை செய்ய முயன்றது.
உடனே அவர் அருகில் உள்ள மேட்டூர் அனல்மின்நிலைய பகுதிக்கு ஓடினார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் சென்று அவர் தஞ்சம் அடைந்தார். உடனே இது குறித்து கருமலைக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மேட்டூர் தொல்காப்பியன், மேச்சேரி பாலமுருகன் ஆகியோர் இரு தனிப்படையாக செயல்பட்டு அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி சென்றனர்.
அப்போது தொழிலாளியை தாக்கி விட்டு தப்பிச்சென்ற தொட்டில்பட்டியை சேர்ந்த வினோத் (23), தியாகராஜன்(24) ஆகிய இருவரையும் மடக்கிபிடித்து தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் நேற்று முன்தினம் இரவு போலீசார் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒருவரை போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனர். அவர் போலீசை கண்டதும் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பிஓட முயன்றார். உடனே அவரை விரட்டி பிடிக்க முயன்ற போது அந்த மர்ம நபர் தவறிவிழுந்து படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் இவர் மேட்டூர் தங்கமாபுரிபட்டணம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மகேந்திரன்(33) என்பதும், வெள்ளையன் மீதான தாக்குதலில் ஈடுபட்டதும், இவர் மீது கொலை முயற்சி வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து வெள்ளையன் கொடுத்த புகாரின் பேரில் வினோத், தியாகராஜன், மகேந்திரன் ஆகிய 3 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.