கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர் வேப்பனப்பள்ளி அருகே பரபரப்பு
வேப்பனப்பள்ளி அருகே கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி பெற்றோர்கள், மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே நல்லூர் கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை 163 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் உள்பட 5 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவே உள்ளது.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்புகள் தொடங்கியது. ஏற்கனவே ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் எல்.கே.ஜி.க்கும் தற்போது உள்ள ஆசிரியர்கள் சென்று வகுப்பு நடத்தி வருகின்றனர். இதனால் மற்ற வகுப்பு மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர்.
பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் நேற்று தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர்.
இதன் காரணமாக நேற்று வகுப்பறையில் ஆசிரியர்கள் மட்டுமே இருந்தனர். மாணவ, மாணவிகள் இன்றி வகுப்பறை வெறிச்சோடி காணப்பட்டது. இது குறித்து ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கும் வரை தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என தெரிவித்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.