எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும்படி எனக்கும் அழுத்தம் கொடுத்தார், எடியூரப்பா காங்கிரஸ் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேரும்படி எனக்கும் எடியூரப்பா அழுத்தம் கொடுத்தார் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜு கவுடா எம்.எல்.ஏ. பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-10 22:30 GMT
மங்களூரு, 

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேரும்படி எனக்கும் எடியூரப்பா அழுத்தம் கொடுத்தார் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜு கவுடா எம்.எல்.ஏ. பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

ராஜு கவுடா எம்.எல்.ஏ.

கர்நாடகத்தில் நடந்து வரும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கூட்டணி அரசை காப்பாற்ற தேவேகவுடா, சித்தராமையா, முதல்-மந்திரி குமாரசாமி உள்பட கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தொகுதி எம்.எல்.ஏ.வான ராஜு கவுடாவுக்கும் ராஜினாமா செய்யும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக தட்சிண கன்னடா மாவட்டம் தர்மஸ்தலாவில் உள்ள இயற்கை ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வரும் ராஜு கவுடா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தலில் போட்டியிட டிக்கெட்

காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பா.ஜனதாவில் சேரும்படியும், எம்.எல்.ஏ. பதவியை உடனடியாக ராஜினாமா செய்யும்படியும் எனக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. நான் இங்கு(இயற்கை ஆயுர்வேத சிகிச்சை மையம்) சிகிச்சை பெற்று வருவதை அறிந்த பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா என்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அந்த சந்தர்ப்பத்தில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜனதாவில் சேரும்படி எனக்கு அவர் அழுத்தம் கொடுத்தார். அப்போது நான் அரசியலில் பணம், அதிகாரம் முக்கியம் இல்லை.

மக்களுக்கு சேவை செய்வதுதான் முக்கியம். நான் சேவை செய்வதற்காக அரசியலுக்கு வந்துள்ளேன். பணம், அதிகாரத்திற்காக வரவில்லை. ஒரு கட்சியில்(காங்கிரஸ்) இருந்து நான் வெற்றிபெற்றுள்ளேன். அந்த கட்சிக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன். ஏனெனில் காங்கிரஸ் கட்சி என்னை நம்பி எனக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுத்தார்கள். பலர் தங்களுக்கு டிக்கெட் கேட்டு கட்சிக்கு அழுத்தம் கொடுத்த நிலையில் எனக்கு கட்சி மேலிடம் டிக்கெட் கொடுத்தது. அதற்கு நான் நன்றிக்கடன் செலுத்த வேண்டும். கட்சியை நம்பியும், என்னை நம்பியும் ஏராளமான தொண்டர்கள் இருக்கிறார்கள்.

ராஜினாமா செய்வது சரியல்ல

இதுமட்டுமல்லாமல் எனக்கு கட்சி மேலிடம், மலைநாடு வளர்ச்சி வாரிய தலைவர் பதவியையும் கொடுத்து கவுரவித்துள்ளது. எனக்கு கிடைத்த பதவிகளை பயன்படுத்தி நான் நன்றாக வேலை செய்து கொண்டிருக்கிறேன். முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள். அதேபோல் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அவர்கள் ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்.

அனைத்து எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகளுக்கும் முதல்-மந்திரி உள்பட அனைவரும் உறுதுணையாக உள்ளனர். அதனால் ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய முடிவை மாற்றி ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும். அதைவிட்டுவிட்டு அவசர, அவசரமாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வது சரியல்ல.

துரோகம் செய்ய மாட்டேன்

எனக்கு பா.ஜனதாவைச் சேர்ந்த பலரிடம் இருந்து அழுத்தம் வந்தது. நான் அவர்களுடைய பெயரை வெளியிட விரும்பவில்லை. நான் காங்கிரஸ் கட்சியின் தத்துவம், சித்தாந்தங்களை கற்றறிந்தவன். அதனால் நான் கட்சிக்கு எந்த நிலையிலும் துரோகம் செய்ய மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்