புதுப்பேட்டை அருகே, விவசாயி வீட்டில் ரூ.2 லட்சம் நகை-பணம் திருட்டு, நள்ளிரவில் கைவரிசை காட்டிய மர்மநபர்களுக்கு வலைவீச்சு

புதுப்பேட்டை அருகே நள்ளிரவில் விவசாயி வீட்டில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-07-09 22:00 GMT
புதுப்பேட்டை,

பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள சின்னப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 47), விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டின் முன்பு படுத்து தூங்கினார். பின்னர் நேற்று காலை எழுந்து பார்த்த போது, வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மோகன்ராஜ், வீட்டுக்குள் சென்று பார்த்தார்.

அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 6½ பவுன் நகை மற்றும் ரூ.90 ஆயிரத்தையும் காணவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நேற்று முன்தினம் இரவு மோகன்ராஜ் தனது குடும்பத்தினருடன் வீட்டின் முன்பு படுத்து தூங்கியதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை திருடியுள்ளனர்.

இதையடுத்து அதே பகுதியில் உள்ள அன்பழகன், யசோதா ஆகியோரது வீட்டின் பின்புற கதவையும் உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கு நகை-பணம் ஏதும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று விட்டதும் தெரியவந்தது.

பின்னர் கடலூரில் இருந்து மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது திருட்டு நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இது குறித்து மோகன்ராஜ் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்