வாலிபரை கொலை செய்த வழக்கில், மினிவேன் டிரைவர் உள்பட 3 பேர் கைது
வடமதுரை அருகே வாலிபரை கொலை செய்த வழக்கில் மினிவேன் டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
வடமதுரை,
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த வேலாயுதம்பாளையம்-செங்குறிச்சி சாலையில் கணவாய்மேடு என்னுமிடத்தில் காரில் ஒரு வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். உடனே சம்பவ இடத்திற்கு சென்று வடமதுரை போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது காரில் எரித்து கொலை செய்யப்பட்டவர், எரியோடு அருகே உள்ள கோவிலூரை சேர்ந்த மகாமுனி மகன் சிவா (வயது 25) என்பது தெரியவந்தது.
இதையடுத்து சிவாவின் உறவினர்கள் மற்றும் நண்பர் களிடம் போலீசார் முதல்கட்ட விசாரணை நடத்தினர். அதில் கள்ளக்காதல் தகராறில் சிவா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அதில் கோவிலூரை அடுத்துள்ள மாயாண்டிபுரத்தை சேர்ந்த மினிவேன் டிரைவரான விவேக் (22) மற்றும் விவேக்கின் நண்பர்களான மாயாண்டிபுரத்தை சேர்ந்த வடிவேல் (24), குடகிபட்டியை சேர்ந்த முனியசாமி (27) ஆகிய 3 பேரும் சேர்ந்து சிவாவை கொலை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
சிவாவிற்கும், விவேக் மனைவி அகிலாண்டேஸ்வரிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த விவேக், சிவாவை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் சிவா தொடர்ந்து அகிலாண்டேஸ்வரியுடன் பழகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விவேக், சிவாவை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி நேற்று முன்தினம் தோப்புப்பட்டியில் நடந்த கோவில் திருவிழாவை காண சிவா காரில் சென்றார். அப்போது கோவிலூர் அருகேயுள்ள புங்கம்பாடி பிரிவு என்னுமிடத்தில் சிவாவின் காரை விவேக் மற்றும் அவருடைய நண்பர்கள் வடிவேல், முனியசாமி ஆகியோர் மறித்தனர். பின்னர் காரில் இருந்த சிவாவை அவர்கள் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் அவருடைய உடலை காரில் வைத்து கணவாய்மேடு என்னுமிடத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு கார் மீது தாங்கள் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்து தப்பி சென்று விட்டனர்.
இவ்வாறு போலீசார் கூறினார்.