கலசபாக்கம் அருகே, வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல் - மாணவர்கள் சாலை மறியல்

கலசபாக்கம் அருகே அரசு பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கியுள்ளனர். இதனை கண்டித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-09 23:15 GMT
கலசபாக்கம்,

கலசபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 500-க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 10-ம் வகுப்பு ஆங்கில பாடப்பிரிவு ஆசிரியராக பணிபுரிபவர் சுந்தரமூர்த்தி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரியாக படிக்காததால் ஒரு மாணவனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவன் தனது வீட்டில் கூறினார்.

இதையடுத்து மாணவனின் பெற்றோர் பள்ளிக்கூடத்திற்கு வந்து வகுப்பறையில் இருந்த சுந்தரமூர்த்தியிடம் தகராறு செய்து அவரை தாக்கிவிட்டு சென்றனர். இது சம்பந்தமாக சுந்தரமூர்த்தி தலைமை ஆசிரியர் திருமாலியிடம் புகார் செய்தார். ஆனால் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் சுந்தரமூர்த்தியை ஒரு கும்பல் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாக உடன் பணிபுரியும் ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் மற்ற ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் எங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அண்ணாதுரையிடம் முறையிட்டனர். அவர் தலைமை ஆசிரியர் திருமாலிடம் கேட்ட போது சரியான பதில் அளிக்காமல் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பெற்றோர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஆதமங்கலம் புதூர் கிராம மக்கள் கூறுகையில், இப்பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளி மாணவர்களிடையே வேறுபாட்டை வெளிப்படுத்தி போராட்டம் நடத்த உடந்தையாக உள்ளார். இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பள்ளி மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை குறைந்துள்ளது. வகுப்பறையில் வெளி ஆட்கள் புகுந்து ஆசிரியரை தாக்கியதற்கு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே தலைமை ஆசிரியரை கண்டித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இந்த நிலையில் ஒரு தரப்பு மாணவர்கள் திடீரென பள்ளி அருகே நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா, ஆரணி, செங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் கடலாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் நேரில் சென்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் நேரில் சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் விசாரணை செய்தனர்.

சாலைமறியலின் போது அவ்வழியாக சென்ற ஒரு வாலிபர் மீது திடீரென சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் வல்லரசு (வயது 19) என்ற வாலிபருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருவண்ணாமலையில் இருந்து ஆயுதப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்