சங்ககிரி அருகே, பஸ்கள் நேருக்குநேர் மோதல் - 30 பயணிகள் காயம்
சங்ககிரி அருகே தனியார் பஸ்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 30 பயணிகள் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
சங்ககிரி,
சங்ககிரியில் இருந்து ஈரோடு மாவட்டம் பவானிக்கு தனியார் பஸ் ஒன்று நேற்று மாலையில் சென்றது. அதேபோன்று பவானியில் இருந்து சங்ககிரிக்கு மற்றொரு தனியார் பஸ் புறப்பட்டு வந்தது.
இந்த இரு தனியார் பஸ்களும், மாலை 4.15 மணியளவில் சங்ககிரி அருகே உத்தரகாந்தமலை பஸ் நிறுத்தம் பகுதியில் வந்தன. அப்போது அந்த இரு பஸ்களும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், இரு பஸ்களிலும் பயணம் செய்த 30 பயணிகள் காயம் அடைந்தனர்.
சேலத்தை சேர்ந்த மாரியம்மாள் (வயது 60), ராமாயி (70), சின்னம்மாள்(60), பழனி(40), அமிர்தம் (45), தனலட்சுமி (40), குழந்தைவேலு (39), பழனியப்பன் (53), பிரசாந்த் (40), வாழப்பாடி நித்யா (30), ராஜாத்தி (60), கதிர்வேல் (32), சரோஜா (54), செல்வி (42), குமாரபாளையம் புஷ்பராஜ் (46), கொங்கணாபுரம் தனம் (35), வைகுந்தத்தை சேர்ந்த பஸ் டிரைவர் ராஜேந்திரன் (43) உள்பட காயம் அடைந்த 30 பேரும், சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இவர்களில் சின்னம்மாள் (60), பழனி (40) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.