காங்கிரஸ் தலைவர் நிம்பல்கர் கொலை வழக்கு அன்னா ஹசாரே கோர்ட்டில் சாட்சியம் அளித்தார்
காங்கிரஸ் தலைவர் பவன்ராஜே நிம்பல்கர் கொலை வழக்கில் காந்தியவாதி அன்னா ஹசாரே நேற்று கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.;
மும்பை,
காங்கிரஸ் தலைவர் பவன்ராஜே நிம்பல்கர் கொலை வழக்கில் காந்தியவாதி அன்னா ஹசாரே நேற்று கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
கொலை வழக்கு
மராட்டியத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் பவன்ராஜே நிம்பல்கர் மற்றும் அவரது கார் டிரைவர் சமத் காசி ஆகியோர் கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டனர். மும்பை- புனே நெடுஞ்சாலையில் அவர்கள் காரில் சென்றபோது கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் மாநில முன்னாள் மந்திரி பதம் பாட்டீலும் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராவார்.
இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இ்ந்த நிலையில் கொலையைான பவன்ராஜே நிம்பல்கரின் மனைவி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி பதம் பாட்டீலும், அவரின் கூட்டாளிகளும் காந்தியவாதி அன்னா ஹசாரேக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். எனவே அன்னா ஹசாரேவை இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்த்துக்கொள்ளவேண்டும்” என்று கோரியிருந்தார்.
ஆனால் ஐகோர்ட்டு அவரின் மனுவை தள்ளுபடி செய்தது.
சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து அன்னா ஹசாரே இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டார்.
சாட்சியம் அளித்தார்
இந்த நிலையில் நேற்று அவர் வழக்கை விசாரித்துவரும் மும்பை சிறப்பு கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் மந்திரி பதம் பாட்டீலை எனக்கு ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக தெரியும். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தன. இதை எதிர்த்து நான் போராட்டம் செய்தேன். இதையடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.பி.சாவந்தின் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.
பவன்ராஜே நிம்பல்கர் கொலை செய்யப்பட்டது குறித்து ஊடகம் மூலமாக தெரிந்துகொண்டேன். என்னையும் கொலை செய்ய அவர் திட்டம் தீட்டுவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள பர்னேர் போலீஸ் நிலையத்தில் அவர் மீது புகார் கொடுத்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.