கீரிப்பாறையில் பலத்த மழை: தரைப்பாலத்தில் காட்டாற்று வெள்ளம் காளிகேசம் சென்ற சுற்றுலா பயணிகள் தவிப்பு

கீரிப்பாறையில் பெய்த பலத்த மழையால் தரைப்பாலத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், காளிகேசம் சென்ற சுற்றுலா பயணிகள் பாலத்தை கடக்க முடியாமல் தவித்தனர்.

Update: 2019-07-09 23:00 GMT
அழகியபாண்டியபுரம்,

குமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே காளிகேசம் மலைப்பகுதி உள்ளது. வனத்துறை பாதுகாப்பில் உள்ள இந்த பகுதி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இயற்கை அழகு கொண்டதாக உள்ளதாலும், அங்கு பிரசித்தி பெற்ற காளிகோவில் உள்ளதாலும், உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். கீரிப்பாறையில் இருந்து காளிகேசம் செல்லும் சாலையில் ஒரு தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் வழியாகத்தான் காளிகேசம் செல்லும் சுற்றுலா பயணிகள் கார், வேன்களில் செல்வது வழக்கம். மழை காலங்களில் காளிகேசம் மலைப்பகுதியில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளம் இந்த தரைப்பாலம் வழியாக பேச்சிப்பாறை அணைப்பகுதிக்கு செல்கிறது.

சுற்றுலா பயணிகள் தவிப்பு

இந்தநிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் கீரிப்பாறை, காளிகேசம் பகுதியில் பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக கீரிப்பாறை- காளிகேசம் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், காளிகேசம் சென்ற சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் தவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் தீயணைப்பு துறையினர், கீரிப்பாறை வனத்துறையினர் மற்றும் கீரிப்பாறை போலீசார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர், அவர்கள் காட்டாற்றின் மறு கரையில் நின்ற பொதுமக்களை கயிறு மூலம் பாலத்தை கடக்க செய்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பின் காட்டாற்றில் தண்ணீர் குறைந்தது.

அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனத்தில் தரைப்பாலத்தை கடந்து சென்றனர். 

மேலும் செய்திகள்