துறைமுக ஊழியரை வெட்டி செல்போன் பறிப்பு 2 வாலிபர்கள் கைது
தூத்துக்குடியில் துறைமுக ஊழியரை அரிவாளால் வெட்டி செல்போன் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி தபால்தந்தி காலனியை சேர்ந்தவர் கணேச விசுவநாதன் (வயது 59). தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழகத்தில் கணக்காளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் காலையில் 3-ம் மைல் பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக நடந்து சென்று கொண்டு இருந்தார். தூத்துக்குடி அசோக் நகர் முதல் தெருவில் சென்றபோது, அவரிடம் 2 வாலிபர்கள் பேசுவது போல் வந்தனர்.
பின்னர் அவர்கள் கணேச விசுவநாதனை அரிவாளால் வெட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3-ம் மைல் பகுதியை சேர்ந்த பரத் (20), முத்துகுமார் (20) ஆகிய 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் அந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, செல்போனை பறிமுதல் செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த வழிப்பறி சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.