மணல் கடத்தலில் ஈடுபட்ட 29 பேர் மீது வழக்கு; 19 வாகனங்கள் பறிமுதல், போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை

மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட 29 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 19 வாகனங்களை பறிமுதல் செய்து போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்தார்.

Update: 2019-07-09 22:45 GMT
சிவகங்கை,

போலீஸ் சூப்பிரண்டாக ரோஹித்நாதன் பதவியேற்றவுடன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பெறப்படும் அனைத்து புகார் மனுக்கள் மற்றும் மருத்துவமனையிலிருந்து பெறப்படும் தகவல்கள் ஆகியவற்றின் மீது உடனடியாகவும் முறையாகவும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகளான சட்ட விரோத மணல் திருட்டு, மது விற்பனை, சூதாட்டம் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் விளைவாக கடந்த ஒரு வார காலத்தில் மாவட்டத்தில் மணல் திருட்டு சம்பந்தமாக 13 வழக்குகளில் 29 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டும், 19 வாகனங்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்தவர்கள் மீது 21 வழக்குகளில் 27 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

அரசு பார்களில் மது விற்பனை செய்த பார் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சூதாட்டம் சம்பந்தமாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 35 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 290 பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கடந்த 4-ந்தேதி மாவட்டம் முழுவதிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கான பயிற்சி போட்டி நடத்தப்பட்டு, அந்த பயிற்சியில் முதலாவதாக வந்த 10 போலீசாருக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 6-ந்தேதி மது அருந்தி சாலை விபத்தில் உயிர்இழப்பைத் தவிர்க்கும் பொருட்டு, மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 307 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்படி வழக்குகள் பதிவு செய்ததில் முதல் 5 இடங்களை பிடித்த போலீஸ்நிலைய பொறுப்பு அதிகாரிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

காவல்துறையை வலுப்படுத்தும் விதமாக ஏராளமான திட்டங்கள் வரும் காலங்களில் செயல்படுத்த உள்ளது என்றும், அவற்றின் முதன்மையானது ரோந்து போலீஸ் பணியை கண்காணிக்கும் விதமாக இபீட் திட்டத்தை செயல்படுத்தவும் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொருட்டு கண்காணிப்பு கேமரா பொருத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்