திருப்பூரில் கடன் பிரச்சினையால் மெஸ் உரிமையாளரை தற்கொலைக்கு தூண்டிய தம்பதி கைது

திருப்பூரில் கடன் பிரச்சினையால் மெஸ் உரிமையாளரை தற்கொலைக்கு தூண்டியதாக தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-07-09 23:45 GMT
திருப்பூர்,

திருப்பூர் வாலிபாளையத்தை சேர்ந்தவர் தேவபிரகா‌‌ஷ்(வயது 35). இவர் அப்பகுதியில் மெஸ் வைத்து நடத்தி வந்தார். இவருடைய சித்தி, சித்தப்பாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 லட்சம் கடன் வாங்கி கொடுத்துள்ளார். அவர்கள் பணத்தை திருப்பிக் கொடுக்காததாலும், வங்கி மற்றும் தனது நண்பர்களிடம் வாங்கிய கடனை தேவபிரகா‌‌ஷ் திருப்பி செலுத்த முடியாமலும் அவதிப்பட்டு வந்தார்.

கடன் பிரச்சினையால் மனமுடைந்த தேவபிரகா‌‌ஷ் கடந்த 1-ந் தேதி தனது நண்பர்கள், உறவினர்களுக்கு தான் தற்கொலை செய்யப்போவதாக செல்போன் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பி விட்டு மெஸ்சில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் எழுதிய கடிதத்தில் தனது சித்தப்பா சுரே‌‌ஷ், சித்தி செல்வி ஆகியோரிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்று தனது குடும்பத்தினரிடம் சேர்க்க வேண்டும் என்று எழுதி வைத்திருந்தார்.

திருப்பூர் வடக்கு போலீசார் முதலில் தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் தேவபிரகாசின் உறவினர்கள் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, தேவபிரகாசின் சித்தி, சித்தப்பா 2 பேரிடம் இருந்து பணத்தை திருப்பி பெற்றுத்தர கோரிக்கை வைத்தனர். அதன்பிறகு தேவபிரகாசை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கை மாற்றம் செய்து, அவருடைய சித்தப்பா, சித்தியான சுரே‌‌ஷ், செல்வி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இந்தநிலையில் திருப்பூர் மண்ணரையை சேர்ந்த சுரே‌‌ஷ்(42) மற்றும் அவருடைய மனைவி செல்வி(45) ஆகிய 2 பேரையும் திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்