ஊட்டியில் குறைதீர்க்கும் முகாம், மாற்றுத்திறனாளிகள் 41 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்

ஊட்டியில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் மாற்றுத்திறனாளிகள் 41 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

Update: 2019-07-09 22:15 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது. முகாமுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளிகள் 41 பேருக்கு ரூ.7 லட்சத்து 95 ஆயிரத்து 900 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் (8 கிராம்) 3 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.75 ஆயிரத்துக்கான தங்க நாணயம்,

தசை திசைவு நோய், முதுகு தண்டுவட பாதிப்பால் பக்கவாதமான 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள், 5 பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரத்து 900 மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம், 13 பேருக்கு இலவச பஸ் பாஸ் அட்டை, 5 பேருக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதையடுத்து மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தினார்.

மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பெற பதிவு செய்தனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தொழில்நெறி திறன் வாரத்தையொட்டி தொழில் நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்த துண்டு பிரசுரங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

இதில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தனித்துணை ஆட்சியர் கண்ணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன், வேலைவாய்ப்பு அலுவலர் வடிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்