குடித்து விட்டு வீட்டில் ரகளை: அம்மிக்கல்லை தலையில் போட்டு மெக்கானிக் கொலை தந்தை கைது

தாம்பரத்தில் தினமும் குடித்து வீட்டிற்கு வந்து ரகளை செய்ததால் மெக்கானிக் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.

Update: 2019-07-09 22:45 GMT
தாம்பரம்,

கிழக்கு தாம்பரம், ஆனந்தபுரம், அண்ணல் ஆறுமுகனார் தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 58). டெய்லராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் (24) என்ற மகன் இருந்தார். மணிகண்டன் இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் மணிகண்டன் தினமும் இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து சண்டை போட்டு ரகளையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அதேபோல நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் மணிகண்டன் மது அருந்திவிட்டு வந்து ரகளையில் ஈடுபட்டார். பின்னர் உறங்கச் சென்றுவிட்டார்.

இந்நிலையில் தொடர்ந்து மணிகண்டன் ரகளையில் ஈடுபட்டதால் ஆத்திரம் அடைந்த உதயகுமார் வீட்டின் வெளியே இருந்த அம்மிக்கல்லை எடுத்து வந்து தூங்கி கொண்டிருந்த மணிகண்டனின் தலையில் போட்டுள்ளார்.

இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த, சேலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்