கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை தேசிய ஊரக தொழிலாளர்கள் முற்றுகை
வேலை வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை தேசிய ஊரக தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி யூனியன் ஊத்துப்பட்டி பஞ்சாயத்தைச் சேர்ந்த தேசிய ஊரக தொழிலாளர்கள் நேற்று கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், யூனியன் ஆணையாளர் பால அரிகரமோகனிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
அதில், கோவில்பட்டி யூனியன் ஊத்துப்பட்டி பஞ்சாயத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் தொய்வில்லாமல் முறையாக வேலை வழங்க வேண்டும். அவர்களுக்கு சட்டப்படியாக நிர்ணயம் செய்யப்பட்ட முழு சம்பளமான ரூ.229-ஐ தினமும் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட யூனியன் ஆணையாளர் பால அரிகரமோகன், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.
இந்த போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரவீந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் மல்லிகா, மாவட்ட குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி, ராமசுப்பு, நகர செயலாளர் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் மோகன்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.