பட்ஜெட் தொடர்பாக எம்.எல்.ஏ.க்களுடன் நாராயணசாமி ஆலோசனை; உயர்த்தப்பட்ட வரிகளை திரும்பப்பெற வலியுறுத்தல்

புதுவை பட்ஜெட் தொடர்பாக முதல்- அமைச்சர் நாராயணசாமி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது உயர்த்தப்பட்ட வரிகளை திரும்பப்பெற வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார்கள்.

Update: 2019-07-08 23:45 GMT
புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வருகிற ஆகஸ்டு மாதம் முடிவதற்குள் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டி உள்ளது. இந்தநிலையில் பட்ஜெட் தயாரிப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

பட்ஜெட் தொடர்பாக அமைச்சர்கள் வகிக்கும் துறை வாரியாக முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆய்வு நடத்தி உள்ளார். மேலும் விவசாயிகள், வர்த்தகர்கள் தரப்பு கருத்துகளையும் கேட்டுள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில் கடந்த 6-ந்தேதி கவர்னர் தலைமையில் மாநில திட்டக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு சட்டமன்ற கட்சி தலைவர்களை அழைக்காததால் முதல்- அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். வருகிற 13-ந்தேதி இந்த கூட்டம் மீண்டும் நடைபெற உள்ளது.

இதற்கிடையே பட்ஜெட் தொடர்பாக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசிக்க முதல்- அமைச்சர் நாராயணசாமி திட்டமிட்டார். இதற்காக அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு அனுப்பி இருந்தார். இந்த ஆலோசனை கூட்டம் சட்டமன்ற கருத்தரங்க அறையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், எம்.எல்.ஏ.க்கள் எம்.என்.ஆர்.பாலன், தனவேலு, விஜயவேணி, ஜெயமூர்த்தி, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிவா, கீதா ஆனந்தன், வெங்கடேசன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் அரசு செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ.க்கள் உயர்த்தப்பட்ட வரிகள் அனைத்தையும் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். புதியதாக வரிகள் எதையும் மக்களிடம் திணிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டனர்.

ஏற்கனவே அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அனைத்தையும் முழுமையாக செயல்படுத்த வேண்டும், தங்கள் தொகுதிகளில் தொடங்கப்பட்ட திட்டங்களையும் முடித்து தர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

மேலும் செய்திகள்