நிர்வாகிகள் மாற்றத்தை கண்டித்து அ.தி.மு.க. தலைமை அலுவலகம் முற்றுகை தீக்குளிக்க முயன்ற தொண்டரால் பரபரப்பு

நிர்வாகிகள் மாற்றத்தை கண்டித்து அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை 500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2019-07-08 21:30 GMT
சென்னை, 

சென்னை தியாகராயநகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சத்யா. கட்சியின் தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளரான இவர், மாவட்ட நிர்வாகிகள் சிலரை மாற்றிவிட்டு, புதிய நிர்வாகிகளை சமீபத்தில் நியமித்தார்.

பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை நேற்று திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாதுகாப்பு கருதி அலுவலக நுழைவுவாயில் மூடப்பட்டது. ஆனாலும் அதனை தள்ளிக்கொண்டு சிலர் உள்ளே புகுந்தனர்.

பின்னர் அவர்கள் அலுவலகத்தின் உள்ளே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிற கட்சிகளில் இருந்து அ.தி.மு.க.வில் இணைந்தவர்களிடமும், கட்சி நிர்வாகிகளிடமும் பணத்தை பெற்றுக்கொண்டு பொறுப்புகளை கொடுப்பதாகவும், பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பொறுப்புகள் வழங்காமல் உதாசீனப்படுத்துவதாகவும் அவர்கள் சத்யா எம்.எல்.ஏ. மீது குற்றம்சாட்டினர். எனவே அவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், அவர்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் அதனை ஏற்க மறுத்து, போலீசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்குள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிலையின் கால்களை தொட்டுக்கொண்டு பெண்கள் சிலர் ஒப்பாரி வைத்து அழுதனர்.

இதற்கிடையே முற்றுகையில் ஈடுபட்ட அ.தி.மு.க. தொண்டரான கோபால் என்பவர் மண்எண்ணெயை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.

பின்னர் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்