பாரம்பரிய கலையை மீட்கும் முயற்சி வில்லுப்பாட்டு பாடி அசத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் பாராட்டு

பாரம்பரிய கலையை மீட்கும் முயற்சியாக வில்லுப்பாட்டு பாடி அசத்தி சமூக கருத்துக்களை பரப்பும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Update: 2019-07-08 22:30 GMT
கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள செவ்வாய்ப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 241 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மாநில அளவில் தூய்மைப்பள்ளிக்கான விருதை பெற்றுள்ள இப்பள்ளியில், இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுப்புற தோற்றம், இது அரசுப்பள்ளி தானா? என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இப்பள்ளி மாணவ-மாணவிகள் மாநில மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். தேசிய அளவிலான திறனறிவு போட்டியில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர். கறம்பக்குடி பகுதியில் நடைபெறும் பொது விழாக்களில் செவ்வாய்ப்பட்டி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்துவது வழக்கம். இதனால் பொதுமக்களிடம் அப்பள்ளி மாணவர்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

வில்லுப்பாட்டு

பேச்சு, நாடகம், இசை, ஓவியம், கலை நிகழ்ச்சிகள் என முத்திரை பதித்த இப்பள்ளி மாணவர்கள் பாரம்பரிய கலையை மீட்கும் முயற்சியாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தனர். இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உதவி செய்தனர். இதைதொடர்ந்து நேற்று முன்தினம் கறம்பக்குடியில் நடந்த தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநாட்டில், செவ்வாய்ப்பட்டி பள்ளி மாணவர்களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. 10 மாணவர்கள் குழுவாக அமர்ந்து சமூக பிரச் சினைகள், மரம் வளர்ப்பு, குடிநீர் சேமிப்பு, சுகாதாரம், கல்வி விழிப்புணர்வு ஆகிய கருத்துக்களை முன்வைத்து வில்லுப்பாட்டு பாடினர். சிறிய வயதில் மிக நேர்த்தியாக சமூக கருத்துக்களை முன்வைத்து கேள்வியும், பதிலுமாக மாணவர்கள் பாடியதால் பொதுமக்கள் பாராட்டினர். அழிந்து வரும் கலையை வருங்கால இளைய தலை முறையினர் கையில் எடுத்திருப்பதற்கு பழமை விரும்பிகள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பாராட்டுக்குரிய மாணவர்கள்

இதுகுறித்து கறம்பக்குடி கலாசாரம் காப்போம் அமைப்பை சேர்ந்த சுபா செல்வம் கூறியதாவது:- கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்கால் குதிரை, பாவைக்கூத்து என நூற்றுக்கணக்கான கலை வடிவங்களை கொண்டது நமது தமிழ்மண். ஆனால் நாகரிகத்தின் வளர்ச்சியால் பல கலைகள் காணாமலேயே போய்விட்டன. பாரம்பரிய கலையை மீட்கும் முயற்சியாக களம் இறங்கியுள்ள செவ்வாய்ப்பட்டி பள்ளி மாணவர்கள் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஆசிரியர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். இவ்வாறு அவர் கூறினார். நாடகமும், கூத்தும் நாட்டின் விடுதலை வேட்கைக்கு வித்தாக அமைந்தன. சமூக கருத்துக்களை தாங்கிய மாணவர்களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

மேலும் செய்திகள்