நாமக்கல்லில் தொழிலாளிக்கு மதுபாட்டில் குத்து 4 பேர் கைது

நாமக்கல்லில் தொழிலாளியை மதுபாட்டிலால் குத்தி கொலை செய்ய முயன்ற வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-07-08 22:30 GMT
நாமக்கல், 

நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் தென்பாண்டியன் (வயது 27). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் அங்குள்ள டாஸ்மாக் பாருக்கு மது குடிக்க சென்றார்.

அப்போது அந்த பாருக்கு கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்த ஜீவா என்கிற ஜீவானந்தம் (24), சிவக்குமார் (33), கணபதிநகர் அஜித் (22), முல்லைநகர் சரவணன் (30), பரமத்தி அருண் என 5 பேர் மது குடிக்க வந்து உள்ளனர்.

அப்போது அங்கு தென்பாண்டியன் மற்றும் அவரது நண்பர்கள் மது குடித்து கொண்டு இருந்த மேஜையில் இருந்து காலி பாட்டில் ஒன்று கீழே தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் அருகே மது குடித்து கொண்டு இருந்த ஜீவா என்கிற ஜீவானந்தம் தரப்பினருக்கும், தென்பாண்டியன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

இந்த தகராறு முற்றியதில் ஜீவா என்கிற ஜீவானந்தம் மற்றும் அவரது நண்பர்கள் மது பாட்டிலை உடைத்து தென்பாண்டியனின் வயிற்றில் குத்தியதாகவும், தலையில் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. தென்பாண்டியனின் நண்பர் ராமசாமி என்பவரும் இந்த தாக்குதலில் காயம் அடைந்தார். இவர்கள் இருவரும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்பாண்டியனை கொலை செய்ய முயன்ற வழக்கில் ஜீவா என்கிற ஜீவானந்தம், அவரது நண்பர்கள் சிவக்குமார், அஜித், சரவணன் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தலை மறைவாகி உள்ள அருணை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்