கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்; கலெக்டரிடம் கிராம மக்கள் முறையீடு

பனையூரில் உள்ள கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டரிடம் முறையிட்டனர்.;

Update: 2019-07-08 23:00 GMT
மதுரை,

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் ராஜசேகர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

மதுரை கள்ளந்திரி அருகே உள்ள நகரி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களது வீடுகளுக்கு மின் இணைப்பு கேட்டு பல முறை மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. எனவே அப்பகுதி மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது அரிக்கேன் விளக்கு, மெழுகுவர்த்தி ஆகியவற்றுடன் வந்து போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டர் ராஜசேகரிடம் மனு அளித்தனர்.

ரெயின்போ மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் பொது செயலாளர் தங்க பெருமாள் தலைமையில் பார்வையற்றவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கி வருகிறது. இதனை ரூ.1,500 ஆக உயர்த்தி தருவதாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். இதனை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மின்சார கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மக்கள் சிவில் உரிமை கழகம் மற்றும் அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் உறுப்பினரும், பெண் வக்கீலுமான அகராதியை கியூ பிராஞ்ச் போலீசார் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பின் தொடர்ந்து சென்று புகைப்படம் எடுக்கின்றனர். கண்காணிப்பு என்ற பெயரில் நள்ளிரவில் அகராதி வீட்டு முன்பு சுற்றுகின்றனர். அவர் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரை மிரட்டி அகராதியை வீட்டை காலி செய்ய வைக்கின்றனர். போலீசாரின் இதுபோன்ற அத்துமீறல்களை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

பனையூர் கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள கண்மாயை சிலர் பிளாட் போட்டு ஆக்கிரமித்துள்ளனர். இதனால் கண்மாயில் நீர் தேங்காமல், கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போய்விட்டது. கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பயனில்லை. எனவே கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. முன்னதாக அவர்கள் கலெக்டர் கார் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

பேரையூர் தாலுகா மங்கல்ரேவு விஜயநாகையாபுரம் மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் பள்ளிக்கூடம் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடைக்கு வந்து மது குடிப்போர், அந்த பகுதியில் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதுகுறித்து போலீசில் புகார் செய்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த கடையை மூடுவதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்