வகுப்பு நேரத்தை மாற்றியமைத்ததை கண்டித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பொத்தேரியில் தனியார் பல்கலைக்கழகத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.

Update: 2019-07-08 22:15 GMT
வண்டலூர்,

சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரியில் தனியார் பல்கலைக்கழகத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சட்டப்படிப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கமாக காலை 8 மணிக்கு சட்டக்கல்லூரி வகுப்புகள் தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடியும்.

இந்த நேரத்தை சட்டக்கல்லூரி நிர்வாகம் காலை 8 மணி முதல் மாலை 3.30 மணி வரை என்று மாற்றி அமைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று காலை 10 மணி அளவில் பல்கலைக் கழக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டக்கல்லூரி மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறுவதை அறிந்த சம்பவ இடத்திற்கு மறைமலைநகர் போலீசார் விரைந்து சென்றனர்.

இதனையடுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்களை கல்லூரி நிர்வாகம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் கல்லூரி மாணவர்களிடையே ஒரு சுமூகமாக உடன்பாடு ஏற்பட்ட காரணத்தினால் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்