பா.ஜனதாவில் 1 கோடி பேரை உறுப்பினர்களாக சேர்க்க நடவடிக்கை; முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

பா.ஜனதாவில் 1 கோடி பேரை உறுப்பினர்களாக சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2019-07-08 23:00 GMT
காரைக்குடி,

முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் காரைக்குடி அருகே கோட்டையூரில் உள்ள கோவிலுக்கு வருகை தந்தார். அங்கு சாமி தரிசனம் முடிந்த பின்பு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் ஒரு கோடி பேரை பா.ஜனதா உறுப்பினர்களாக சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வும், இறக்கமும் நாட்டின் வளர்ச்சிக்காக நடைபெறும் மாற்றங்களைப் பொறுத்து அமைகிறது. நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் இதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

இந்தியை எதிர்ப்பதாகக் கூறும் திராவிட கட்சிகளின் பிரமுகர்கள் தாங்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தியை ஒரு பாடமாகவே வைத்துள்ளனர். தங்களது குழந்தைகளை இந்தி கற்க செய்கின்றனர். இந்தியை நன்கு அறிந்தவர்களை தான் டெல்லிக்கு முக்கிய பணிகளுக்கு அனுப்புகின்றனர். வைகோ ராஜ்ய சபை உறுப்பினரானால் நல்லது தான்.

அவர் காரண காரியங்களோடு தக்க ஆதாரங்களுடன் சிறப்பான வாதங்களை எடுத்து வைப்பவர். அவரது முதல் பேச்சு 1½ லட்சம் ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு காரணமானவர்கள், அதற்கு துணை போனவர்களின் கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்ற வைகோவின் ஆழ் மனதில் பதிந்திருக்கும் விஷயங்களை வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கும் என நம்புகிறேன்.

தமிழ் மாணவர்கள் வல்லமை படைத்தவர்கள். இந்தியாவில் எந்த மாநில மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தும் படிக்க தகுதி பெற்றவர்கள். அவர்கள் தகுதிகளை வளர்த்து கொள்ள இங்கு உள்ள சில அரசியல் கட்சிகள் தடையாக உள்ளன. இதனை மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது தேசிய செயற்குழு உறுப்பினர் விஸ்வநாதகோபாலன், ராமேசுவரம் கோட்ட இணைப்பொறுப் பாளர் ராஜேந்திரன், எஸ்.சி.அணியின் மாநிலச் செயலாளர் ஆதினம், சாக்கோட்டை ஒன்றிய தலைவர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்