சிவகாசி பகுதியில் சேதமடைந்த கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படும் நிலை; விபரீதத்திற்கு வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அச்சம்

சிவகாசி பகுதியில் உள்ள வீடுகளுக்கு சேதமடைந்த கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுவதால் விபரீதம் ஏற்படும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Update: 2019-07-08 22:30 GMT
சிவகாசி,

சிவகாசி தாலுகாவில் 9 கியாஸ் சிலிண்டர்கள் வினியோகஸ்தர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் 1 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த காலங்களை போல் இல்லாமல் தற்போது கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் புதிய நடைமுறைகள்அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 1 வாரத்துக்குள் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் கியாஸ் சிலிண்டர்களை பெற்று பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் சிவகாசி பகுதியில் உள்ள சில வினியோகஸ்தர்களிடம் இருந்து வினியோகம் செய்யப்படும் கியாஸ் சிலிண்டர்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்த குடும்ப தலைவிகள் அச்சம் அடைந்து வருகிறார்கள். கியாஸ் சிலிண்டர்களை ஒரு குறிப்பிட்ட வருடத்துக்கு தான் பயன்படுத்த வேண்டும் என்று விதி உள்ள நிலையில் சேதம் அடைந்த சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பி வினியோகம் செய்வது ஏற்புடையது அல்ல. இதுபோன்ற சேதம் அடைந்த சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பி அனுப்பும் போது பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடுகிறது.

எனவே இனிவரும் காலத்தில் சேதம் அடைந்த சிலிண்டர்களை எண்ணெய் நிறுவனங்கள் வினியோகம் செய்தாலும் அதை பொதுமக்களுக்கு வினியோகம் செய்யாமல் மீண்டும் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை சிலிண்டர் வினியோகம் செய்யும் நிறுவனங்கள் எடுக்க வேண்டும். இல்லை என்றால் சேதம் அடைந்த கியாஸ் சிலிண்டர்களால் விபரீதம் ஏதும் ஏற்பட்டு உயிர்பலி சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது.

எனவே இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் அக்கறை எடுத்து சேதமடைந்த கியாஸ் சிலிண்டர்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்யாமல் இருக்க தகுந்த உத்தரவுகளை சம்பந்தப்பட்ட கியாஸ் வினியோக நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்