ரெயில் தண்டவாளத்தில் பிணம் கிடந்தது: சேலம் பல்கலைக்கழக மாணவர் கொலையில் பரபரப்பு தகவல் கைது செய்யப்பட்ட 3 பேரும் சிறையில் அடைப்பு
தர்மபுரி அருகே ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த சேலம் பல்கலைக்கழக மாணவர் கொலையில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை ரெயில் தண்டவாளத்தில் கடந்த 25-ந்தேதி ஒரு வாலிபர் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக தர்மபுரி ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்தவர் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மல்லிக்குட்டை கிராமத்தை சேர்ந்த சசிக்குமார்(வயது 29) என தெரியவந்தது. இவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்.பில். படித்து வந்தது தெரியவந்தது. சசிக்குமாரின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சேலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையில் தர்மபுரி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டபாணி உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சசிக்குமார் வைத்திருந்த மடிக்கணினி, செல்போன் மற்றும் பணம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் சசிக்குமாரின் செல்போன் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது அந்த செல்போனை ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த விஜய்ராமசாமி (23) என்பவர் பயன்படுத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக விஜய்ராமசாமியை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவரும், இண்டூர் அருகே உள்ள மாரியம்பட்டியை சேர்ந்த சசிக்குமார்(22), கார்த்திக்(21) ஆகியோர் சம்பவத்தன்று தர்மபுரி பஸ்நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கு நின்று கொண்டிருந்த சசிக்குமாரை ஆசை வார்த்தை கூறி அதியமான்கோட்டைக்கு அழைத்து சென்று, அவரை தாக்கியது தெரியவந்தது.
இதில் காயமடைந்து மயங்கி விழுந்த அவரை அங்குள்ள ரெயில் தண்டவாளத்தில் வீசி சென்றதும், பின்னர் அந்த வழியாக வந்த ரெயில் மோதி சசிக்குமார் உயிர் இழந்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து விஜய்ராமசாமி, சசிக்குமார், கார்த்திக் ஆகிய 3 பேரையும் ரெயில்வே போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் தரப்பில் கூறுகையில், கடந்த 24-ந்தேதி ஒரு குற்ற வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஓசூர் சென்ற விஜய்ராமசாமி இண்டூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு அவருடைய உறவினர் மகன்களாக சசிக்குமார், கார்த்திக் ஆகியோருடன் சேர்ந்து தர்மபுரி பஸ்நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு நின்றிருந்த சேலம் பல்கலைக்கழக எம்.பில். மாணவர் சசிக்குமாரிடம் அவர்கள் பேச்சு கொடுத்துள்ளனர். அப்போது அவர்கள் நட்பு ஏற்படுத்தி கொண்டு ஓரின சேர்க்கைக்கு ஆசை காட்டி அவரை அழைத்து சென்று உள்ளனர்.
அங்கு அவர்கள் பல்கலைக்கழக மாணவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவருடைய பாக்கெட்டில் இருந்த பணம், செல்போன் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை பறித்து கொண்டு தாக்கி உள்ளனர். இதனால் மயங்கி விழுந்த சசிக்குமாரை கொலை செய்யும் நோக்கத்துடன் அதியமான்கோட்டை அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் போட்டு விட்டு சென்றதால் அந்த வழியாக வந்த ரெயில் மோதி அவர் இறந்து உள்ளார். இதில் மேலும் வேறு யாருக்காவது தொடர்பு உண்டா? என்பது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர்.