படவேடு அருகே பிணத்துடன் செல்பவர்களை நில உரிமையாளர்கள் தாக்குகின்றனர் மயானத்துக்கு பாதை வசதி கேட்டு கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

படவேடு அருகே உள்ள கிராம பகுதியை சேர்ந்தவர்கள் 40 ஆண்டுகளாக மயானத்துக்கு பிணத்தை கொண்டு செல்ல பாதை வசதியில்லை என்றும், தனிநபர் நிலம் வழியாக செல்லும்போது 2 பேர் கிராம மக்களை தாக்குவதாகவும் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

Update: 2019-07-08 23:00 GMT
திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பொதுமக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். கூட்ட அரங்கில் பொது மக்களிடமிருந்தும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்தும் கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார். மொத்தம் 977 மனுக்கள் பெறப்பட்டது.

பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் வழங்கி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் நிலுவையிலுள்ள மனுக்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் போளூர் தாலுகா படவேடு ஊராட்சி ராமநாதபுரம் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். சுமார் 40 ஆண்டுகளாக எங்கள் கிராமத்தில் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய தனி நபர்கள் நிலத்தின் வழியாக செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக பிணங்களை எடுத்துச்செல்லும்போது 2 நில உரிமையாளர்கள் அவர்களை திட்டுவதையும், அடிப்பதையும் வாடிக்கையாக கொண்டு உள்ளனர். 2 முறை திருவண்ணாமலை மற்றும் ஆரணி கோட்டாட்சியர்களிடம் சமாதானம் பேசிப்பார்த்தும் வழிவிட மறுக்கின்றனர்.

நாங்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று ஒவ்வொரு முறையும் எங்களை அடித்து மிரட்டுகின்றனர். தங்கள் அலுவலகத்தில் 3 முறை மனு அளித்தும் மயானப் பாதை சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த மனுவினை கருணையுடன் பரிசீலனை செய்து எங்களுக்கு மயானத்திற்கு செல்ல பாதை அமைத்து தர தாங்கள் ஆவண செய்யுமாறு கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்