முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் தரிசாக கிடக்கும் விளைநிலங்கள்
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படாததால் விளைநிலங்கள் தரிசாக கிடக்கிறது.
தேனி,
தேனி அருகே போடிவிலக்கில் உள்ளது கன்னிமார்குளம். இந்த குளத்திற்கு முல்லைப்பெரியாறு ஆற்றில் இருந்து தண்ணீர் வருகிறது. கன்னிமார்குளத்தில் நிரம்பும் தண்ணீரால் முத்துதேவன்பட்டி பகுதியில் உள்ள சுமார் 200 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாத காரணத்தினால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 112.40 அடியாக உள்ளது. இந்நிலையில் குடிநீர் தேவைக்காக மட்டும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தினமும் வினாடிக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
இதன் காரணமாக முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் குறைவாகவே வருகிறது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படாததால் முதல்போக நெல் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். குறிப்பாக வீரபாண்டி, சடையால்பட்டி, வயல்பட்டி, முத்துதேவன்பட்டி போன்ற பகுதிகளில் பல ஏக்கர் நிலங்கள் தரிசாக கிடக்கிறது. தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்து முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் விரைவில் உயரவேண்டும் என்று விவசாயிகள் வேண்டி வருகின்றனர்.