வேலூர் நாடாளுமன்ற தொகுதியுடன் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலை நடத்த வேண்டும் முத்தரசன் பேட்டி

வேலூர் நாடாளுமன்ற தொகுதியுடன் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என முத்தரசன் தெரிவித்தார்.

Update: 2019-07-07 23:00 GMT
திருச்சி,

‘நீட்’ தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி கடந்த 2017-ம் ஆண்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களை ஜனாதிபதி கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதமே நிராகரித்து விட்டார் என மத்திய அரசின் வக்கீல் ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தமிழக அரசுக்கு முன் கூட்டியே தெரிந்து அதனை மக்களுக்கு தெரியப்படுத்தாமல் மூடி மறைத்து விட்டதா? மத்திய அரசுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்பட்டதா? என்பது சந்தேகம். ‘நீட்’ தேர்வு விவகாரத்தில் தமிழக அரசிடம் வெளிப்படை தன்மை இல்லை. ‘நீட்’ தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 5-ந்தேதி நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை இன்னும் நிறைவேற்றப்பட வில்லை. ஆனால் பட்ஜெட் அறிவிக்கப்பட்ட உடனே பெட்ரோல்-டீசல் மீதான வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வந்ததால் அதன் விலைகள் உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். பெட்ரோல்-டீசல் மீதான வரி விதிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இதனை எதிர்த்து போராட்டம் நடத்தினால் மத்திய அரசு கண்டுகொள்ளாது.

ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ள வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலோடு விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையும் நடத்த வேண்டும். வேலூர் தொகுதி தேர்தலை ஜனநாயக முறைப்படி தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும். தமிழகத்தில் 2021-ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தான் வரும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அப்படியானால் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயங்குவது ஏன்?. தோல்வி பயத்தினால் தான் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் உள்ளனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை அழகாக ஆங்கிலத்தில் வாசித்தார். அதற்கு அவரை பாராட்டலாம். ஆனால் பட்ஜெட்டை பாராட்ட முடியாது. முகிலன் உயிருடன் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. போலீசார் விசாரணையில் தான் உண்மை நிலவரம் தெரியவரும். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக சென்னையில் நாளை (அதாவது இன்று) அனைத்து கட்சி கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பங்கேற்று எங்கள் எதிர்ப்பை தெரிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட செயலாளர் திராவிட மணி, மாநிலக்குழு உறுப்பினர் சுரேஷ் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்