ஓய்வூதியத்தை அரசே வழங்க வலியுறுத்தி தஞ்சையில் 12-ந் தேதி ஆர்ப்பாட்டம் ஏ.ஐ.டி.யூ.சி. கூட்டத்தில் தீர்மானம்

ஓய்வூதியத்தை அரசே வழங்க வலியுறுத்தி தஞ்சையில் வருகிற 12-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஏ.ஐ.டி.யூ.சி. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-07-07 22:15 GMT
தஞ்சாவூர்,

கும்பகோணம்-நாகை மண்டல அரசு போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யூ.சி. ஓய்வூதியர்கள் கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. இதற்கு சங்க தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அப்பாத்துரை, மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில், அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர் களுக்கு அரசே ஓய்வூதியம் வழங்க வேண்டும். இதற்கான தீர்மானத்தை நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் 10-ந் தேதிக்கு பிறகு தான் வழங்கப்பட்டு வருகிறது. மாதத்தின் முதல் நாளே ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அகவிலைப்படி

உயர்ந்துவிட்ட பழைய அகவிலைப்படி 154 சதவீதத்தை ஓய்வூதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு 15 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பணிக்கொடை தொகை உள்ளிட்ட பணப்பலன்களை தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும். கும்பகோணம் கோட்டத்தில் வாரிசு பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 200 பேருக்கு பணி நியமன ஆணையை விரைவாக வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை கரந்தையில் உள்ள அரசு போக்குவரத்து கழக கோட்ட அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் இணைந்து வருகிற 12-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் கவுரவ தலைவர் சந்திரமோகன், பொருளாளர் பாலசுப்பிரமணியன், நிர்வாகிகள் பீர்த்தம்பி, வெங்கடேச பிரசாத், முருகையன், மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்