பெங்களூருவில் 200 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை
பெங்களூருவில் 200 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினார்கள். மேலும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரவுடிகளை துணை போலீஸ் கமிஷனர் ரமேஷ் எச்சரித்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூருவில் சமீபகாலமாக பெண்களிடம் தங்க சங்கிலிகள் பறிப்பது, வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு, போலீஸ் கமிஷனர் அலோக்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பழைய குற்றவாளிகள், ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சிட்டி மார்க்கெட், கெங்கேரி, மாகடி ரோடு, விஜயநகர், ஜே.ஜே.நகர் உள்ளிட்ட மேற்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ரவுடிகள், பழைய குற்றவாளிகளின் வீடுகளில் போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள். மேற்கு மண்டலத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்றது.
பின்னர் 200-க்கும் மேற்பட்ட ரவுடிகள் சுதந்திர பூங்காவுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ரமேஷ், ரவுடிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது ரவுடிகள் தற்போது செய்யும் தொழில், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகிறார்களா? பொதுமக்களை மிரட்டி பணம் வசூலிக்கிறார்களா? உள்ளிட்டவை குறித்து அவர் விசாரித்தார். மேலும் ரவுடி தொழிலை விட்டுவிட்டு திருந்தி வாழும்படியும் துணை போலீஸ் கமிஷனர் ரமேஷ் கூறினார்.
அதே நேரத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்றும், அவ்வாறு குற்றங்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரவுடிகளுக்கு, துணை போலீஸ் கமிஷனர் ரமேஷ் எச்சரிக்கை விடுத்தார். பின்னர் அந்த ரவுடிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.