வாசுதேவநல்லூர் அருகே நான்கு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மனிதசங்கிலி

வாசுதேவநல்லூர் அருகே நான்குவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

Update: 2019-07-07 22:45 GMT
வாசுதேவநல்லூர், 

வாசுதேவநல்லூர் அருகே என்.எச். 744 தேசிய நெடுஞ்சாலை நஞ்சை மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கத்தினர் சார்பில் நான்கு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெறுவதாக அறிவித்தனர். இதை தொடர்ந்து சிவகிரி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. சமாதான கூட்டத்திற்கு நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டு வந்தனர். ஆனால் என்.எச். 744 நன்செய் மாற்றமைப்பு சங்க நிர்வாகிகளில் குறிப்பிட்ட சிலரையே கூட்டத்திற்கு அனுமதித்தனர். இதனால் விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

இந்தநிலையில் திட்டமிட்டவாறு நேற்று விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் தேசியக்கொடி ஏந்தியபடி நான்கு வழிசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனிதசங்கிலி போராட்டம் நடத்தினார்கள். சுமார் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளார் முதல் சிவகிரி வெற்றிலை கொடிக்கால் பகுதி உள்ள விவசாய நிலங்களில் தேசியக்கொடியை கையில் பிடித்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி அறப்போராட்டம் நடத்தினார்கள்.

இதற்கு விவசாய அமைப்பின் தலைவர் மாடசாமி, பார்த்தசாரதி, விஸ்வநாதபேரி ராதாகிருஷ்ணன், உள்ளார் சரவணகுமார் மீரான்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர். மனித சங்கிலி போராட்டத்தை முன்னிட்டு புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

மேலும் செய்திகள்