வீரன் அழகுமுத்துகோன் பிறந்த நாள் விழா: அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் நடவடிக்கை ஆலோசனை கூட்டத்தில் முடிவு

வீரன் அழகுமுத்துகோன் பிறந்த நாள் விழாவையொட்டி அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2019-07-07 21:45 GMT
கோவில்பட்டி, 

தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளம் கிராமத்தில் வருகிற 11-ந் தேதி (வியாழக்கிழமை) வீரன் அழகுமுத்துகோன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அழகுமுத்து கோன் நலச்சங்கம், வீரன் அழகுமுத்து கோன் வாரிசுதாரர்கள், யாதவர் பாதுகாப்பு பேரவையினர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று காலையில் நடந்தது.

கூட்டத்திற்கு கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் தலைமை தாங்கினார். இதில் கோவில்பட்டி உட்கோட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விழா கொண்டாடப்படும் கிராமங்களில் விழா பொறுப்பாளர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் உரிய முன்அனுமதி பெற வேண்டும். விழா சம்பந்தமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டு வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும். அனுமதியின்றி பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி பெற்று வைக்கப்படும் பிளக்ஸ் போர்டுகள் 11-ந் தேதி மாலை 6 மணிக்குள் வைத்தவர்களே அகற்றிட வேண்டும். விழாவில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் வருவதற்கு அனுமதி இல்லை.

விழாவிற்கு வரும் வாகனங்கள் ஆர்ச் வழியாக கட்டாலங்குளம் செல்லும் ரோட்டில் செல்ல வேண்டும். விழா முடிந்த பின்னர் நெல்லை மார்க்கமாக செல்பவர்கள் கயத்தாறு வழியாகவும், சங்கரன்கோவில், கோவில்பட்டி, மதுரை மார்க்கமாக செல்பவர்கள் கழுகுமலை வழியாகவும் செல்ல வேண்டும். விழாவில் கலந்து கொள்ள வருபவர்கள் வாடகை காரில் வர அனுமதி கிடையாது. விழாவிற்கு வருபவர்கள் மது பாட்டில்கள், ஆயுதங்கள் வைத்து இருக்க கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்