தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் நிழற்குடை இன்றி மக்கள் அவதி
தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் நிழற்குடை இல்லாமல் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தை ரூ.51 கோடி செலவில் மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. தொடர்ந்து பணிகள் தொடங்குவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தொடர்ந்து பஸ்களை மாற்று இடத்தில் இருந்து இயக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
அந்த வகையில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு இருந்து அனைத்து பஸ்களையும் இயக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இது தொடர்பாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, நேற்று முன்தினம் திடீரென அனைத்து பஸ்களும் எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்துக்கு மாற்றப்பட்டன. பஸ் நிலையத்தின் அருகேயே இந்த மைதானம் அமைந்து இருப்பதால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.
அதே நேரத்தில் அந்த மைதானத்தில் பயணிகள் நிற்பதற்கான எந்தவித நிழற்குடையும் இல்லை. இதனால் தற்காலிக பஸ் நிலையத்தில் மக்கள் கொளுத்தும் வெயிலில் பஸ்சுக்காக காத்து நின்றனர். இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டனர். சிலர் அந்த பகுதிகளில் நிற்கும் மரங்களின் கீழே தஞ்சம் அடைந்தனர்.
இதுகுறித்து பஸ் பயணி ஒருவர் கூறும் போது, பஸ் நிலைய பணிகள் நடப்பதால் தற்காலிக பஸ் நிலையம் செயல்பட தொடங்கி உள்ளது. இது தொடர்பாக எந்தவித முன்னறிவிப்பும் மக்களுக்கு கொடுக்கப்படவில்லை. இங்கு பொதுமக்கள் வசதிக்காக நிழற்குடை, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக ஏற்படுத்த வேண்டும். பஸ் நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.