பெரம்பலூர், குரும்பலூர் பேரூராட்சி பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டும் கலெக்டர் பேச்சு

பெரம்பலூர், குரும்பலூர் பேரூராட்சி பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா கூறினார்.

Update: 2019-07-07 23:00 GMT
பெரம்பலூர்,

மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டம் செயல்படுத்துதல் தொடர்பான மாவட்ட நிலை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இதில் மத்திய அரசின் நீர் மேலாண்மை துறையின் கூடுதல் செயலாளர் ராஜேஸ்வரி, மத்திய அரசின் இரும்புத்துறையின் துணைச் செயலாளர் முரளி, வேப்காஸ் நிறுவனத்தின் பொறியாளர் தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் சாந்தா பேசியதாவது:-

மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள குறுவட்ட பகுதிகளை அளவில் கண்டறிந்து, அப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நீர் ஆதார திட்டங்களை பெருக்குதல், மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, புதிய திட்டங்களை உருவாக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 5 குறுவட்டங்களிலுள்ள 53 ஊராட்சிகளிலும், பெரம்பலூர் நகராட்சி மற்றும் குரும்பலூர் பேரூராட்சி பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் அபாயகரமான அளவில் மிகவும் கீழே சென்றுவிட்டது. எனவே இப்பகுதிகளில் வரும் காலங்களில் நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்தும் வகையில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை புதிதாக உருவாக்குதல், பாழடைந்த மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை மேம்படுத்தும்பணிகளை மேற்கொள்ள தேவையான முதலீடுகளை பெறுவது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் இக்குழுவினர் ஆலோசனைகளையும், தொழில்நுட்ப வழிகாட்டுதல்களையும் வழங்க உள்ளனர். மேலும் பொதுமக்களிடையே மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் இக்குழுவினரின் ஆலோசனையின் பேரில் நடைபெற உள்ளது என்றார். இதையடுத்து ஜல் சக்தி அபியான் குழுவினர் பொதுப்பணித்துறை, வேளாண்மை துறை, வேளாண் பொறியியல்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், வனத்துறை, நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சிதுறை ஆகியவற்றின் மூலமாக பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய நீர் ஆதாரங்களை தோற்றுவிக்கவும், பழைய நீர் ஆதாரங்களை சீர்படுத்தி முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டுவர மேற்்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் புதுமையான யுத்திகள் குறித்தும் அறிந்து கொள்வதற்காக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சீனிவாசன், மகளிர் திட்ட இயக்குனர் தேவேந்திரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்