அரசரடி மலைக்கிராமத்தில், கோவிலில் இருந்த சாமி சிலைகளை வனத்துறையினர் பறிமுதல் - போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
அரசரடி மலைக்கிராமத்தில் கோவிலில் இருந்த சாமி சிலைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனை கண்டித்து பொதுமக்கள் மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
கடமலைக்குண்டு,
வருசநாடு அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அரசரடி மலைக்கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மாரியம்மன் கே £விலில் அடுத்த மாதம் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக கோவிலை புதுப்பிக்கும் பணிகளில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதிய சிலைகள் பொதுமக்கள் சார்பில் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அரசரடி கிராமத்திற்கு வருசநாடு வனத்துறையினர் சென்றனர்.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் புதிய சாமி சிலைகளை வைக்க கூடாது என்று வனத்துறையினர் கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து கோவிலில் புதிதாக வைக்கப்பட்ட சாமி சிலைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து அரசரடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று வனத்துறையினரை கண்டித்து மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். உடனே போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோவில் சிலைகளை எடுத்து செல்லும்போது வனத்துறையினரை கிராம பெண்கள் சிலர் தடுத்து நிறுத்த முயன்றதாகவும், அவர்களை வனத்துறையினர் தகாத வார்த்தையால் பேசி, தாக்கியதாகவும் புகார் கூறினர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக பொதுமக்களிடம் புகார் மனு பெற்றுக்கொண்ட போலீசார், பெண்களிடம் அத்துமீறியது தொடர்பாக சம்பந்தப்பட்ட வனத்துறையினரிடம் விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.
அதனைதொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.