நீர் மேலாண்மை திட்டங்களை ஆய்வு செய்ய 13 பேர் கொண்ட குழுவினர் நாமக்கல் வருகை கலெக்டர் தலைமையில் ஆலோசனை

நீர் மேலாண்மை திட்டங்களை ஆய்வு செய்ய 13 பேர் கொண்ட குழுவினர் நாமக்கல் வருகை தர உள்ளனர். இதையொட்டி கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2019-07-07 22:45 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் மேலாண்மை பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

மத்திய அரசின் கீழ் புதிதாக நீர் மேலாண்மை திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளது. இதையொட்டி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிற நீர் மேலாண்மை திட்டங்களை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக உயர் அலுவலர்கள், தொழில் நுட்ப வல்லுனர்களை கொண்ட 13 நபர்கள் கொண்ட குழுவினர் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர்.

இந்த குழுவினர் ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், வனத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நீர் நிலைகளை மேம்படுத்தி உள்ள பணிகள், மழைநீர் சேகரிப்பு, பண்ணைக்குட்டைகள், சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசன திட்ட செயல்பாடுகள், குடிநீர் திட்டங்கள், நீர் பாசன அமைப்புகள், தடுப்பு அணைகள் உள்ளிட்ட நீர் பயன்பாடு, நீர் மேலாண்மை, நீர் செறிவூட்டும் கட்டமைப்பு பணிகள் குறித்து நேரில் பார்வையிட உள்ளார்கள்.

இந்த குழுவினர் அனைத்து பகுதிகளிலும் அனைத்துத்துறை பணிகளையும் பார்வையிட உள்ளதால், சம்பந்தப்பட்ட துறைகளின் அலுவலர்கள் உடன் சென்று தங்கள் துறையின் மூலம் செயல்படுத்தி உள்ள திட்டப்பணிகளை விவரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் டாக்டர் காஞ்சனா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்