போளூரில் காதல் திருமணம் செய்த பெண் கடத்தல் தந்தை உள்பட 7 பேருக்கு வலைவீச்சு

போளூரில் காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய தந்தை உள்பட 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2019-07-07 22:45 GMT
போளூர், 

போளூர் வசந்தம் நகரை சேர்ந்தவர் மணி. இவரது மகன் வினோத்குமார் (வயது 25). இவர், கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு மணி குடும்பம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றனர். அங்கு காத்திருக்கும் அறையில் திருவண்ணாமலையை அடுத்த பவித்ரம் கிராம முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கராஜன் குடும்பத்தினரும் சாமி தரிசனத்திற்கு காத்திருந்தனர்.

அப்போது வினோத்குமாரும், ரங்கராஜன் மகள் ராஜஸ்ரீயும் (19) சந்தித்து உள்ளனர். பின்னர் செல்போன் மூலம் பேச்சு தொடர்ந்து காதலாக மலர்ந்து உள்ளது. இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே கடந்த ஜூன் மாதம் 6-ந் தேதி குடும்பத்தினருக்கு தெரியாமல் கடலூரில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். 2 பேரும் வெவ்வேறு சமூகத்தினர் ஆவர்.

இதனையடுத்து அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தியை சந்தித்து பாதுகாப்பு கோரினர். அவரது உத்தரவின் பேரில் திருவண்ணாமலை கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் பெண்ணின் பெற்றோரை அழைத்து சமாதானம் பேசினார். பெண் மேஜராக இருப்பதால் அவருடைய விருப்பம் தான் முக்கியம் என்பதால், சட்டப்படி இருவரையும் வாழவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து காதல் திருமணம் செய்து கொண்டவர்களை போளூருக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் பெண்ணின் தந்தை ரங்கராஜ், அவரது தாய்மாமன் ராஜன் உள்பட 7 பேர் ஒரு காரில் வந்து திடீரென வீட்டிற்குள் புகுந்து ராஜஸ்ரீயை கடத்தி சென்றனர்.

இதுகுறித்து வினோத்குமார் போளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து, ரங்கராஜ், ராஜன் உள்பட 7 பேரை வலைவீசி தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்