ஜோலார்பேட்டை அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளரை தாக்கி ரூ.2 லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

ஜோலார்பேட்டை அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளரை தாக்கி ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-07-07 22:30 GMT
ஜோலார்பேட்டை,

திருப்பத்தூரில் உள்ள புதுப்பேட்டை ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 46). இவர், ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு பங்கில் வசூலான ரூ.2 லட்சத்தை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூர் நோக்கி புறப்பட்டார்.

முதலைமடுவு என்ற இடத்தில் வந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் சிவக்குமாரை முந்தி சென்று வழி மறித்தனர். மேலும் சிவக்குமாரை கீழே தள்ளி இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு, ரூ.2 லட்சம், செல்போன், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அங்கு வந்து மயங்கி கிடந்த சிவக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து சிவக்குமார் ஜோலார்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பழனி வழக்குப்பதிவு செய்து, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்