‘நோ பார்க்கிங்' பகுதியில் வாகனம் நிறுத்தினால் ரூ.15 ஆயிரம் வரை அபராதம் : மும்பையில் இன்று முதல் அமல்

பொது வாகன நிறுத்தங்கள் உள்ள இடத்தில் இருந்து 500 மீட்டருக்குள் ‘நோ பார்க்கிங்' பகுதியில் வாகனங்கள் நிறுத்தினால் ரூ.15 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

Update: 2019-07-06 23:45 GMT
மும்பை,

மும்பையில் சட்டவிரோதமாக சாலைகள், தெருக்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க மாநகராட்சி பொது வாகன நிறுத்தங்கள் உள்ள இடங்களில் இருந்து 500 மீட்டருக்குள் சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்படும் வாகன உரிமையாளர்களுக்கு அதிகளவு அபராதம் விதிக்க முடிவு செய்தது.

அதன்படி மும்பையில் தாதர், பரேல், கோரேகாவ் உள்ளிட்ட 26 இடங்களில் உள்ள பொது வாகன நிறுத்தங்கள் அருகில் ‘நோ பார்க்கிங்' பகுதிகளில் வாகனங்களை நிறுத்தினால் அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது.

மும்பை மாநகராட்சி மேம்பாட்டு கமிட்டி இந்த திட்டத்தை தற்போது அமல்படுத்த வேண்டாம் என கோரிக்கை விடுத்து இருந்தது. மேலும் எதிர்க்கட்சி கவுன்சிலர்களும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். எனினும் மாநகராட்சி நிர்வாகம் கமிட்டி, கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

இந்தநிலையில் ‘நோ பார்க்கிங்' பகுதியில் வாகனம் நிறுத்தினால் ரூ.15 ஆயிரம் வரை அபராதம் விதிக்கும் திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

இந்த திட்டத்தால் வாகன ஓட்டிகள், மாநகராட்சியினர் இடையே தகராறு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே மாநகராட்சி அபராதம் வசூலிக்கும் பணியில் முன்னாள் ராணுவ வீரர்களை ஈடுபடுத்த உள்ளது. அவர்களுடன் போக்குவரத்து போலீசாரும் இணைந்து பணியாற்றுவார்கள்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வாகன நிறுத்த அபராத திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதிக அபராதம் வசூலிக்கப்பட உள்ளது குறித்து ‘நோ பார்க்கிங்' பகுதிகளில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும். மேலும் அபராத தொகை குறித்த விவரங்களும் அந்த அறிவிப்பில் இடம் பெற்று இருக்கும்.

வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் பட்சத்தில் 30 நாட்களுக்குள் அபராதத்தை செலுத்தி அவற்றை மீட்க வேண்டும். அப்படி மீட்கப்படாத வாகனங்கள் ஏலத்தில் விடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நோ பார்க்கிங் அபராத விவரம்

கனரக வாகனங்கள் - ரூ.15,000

4 சக்கர இலகுரக வாகனங்கள் - ரூ.10,000

3 சக்கர வாகனங்கள் - ரூ.8,000

இருசக்கர வாகனங்கள் -ரூ.5,000 

மேலும் செய்திகள்